
கோலாலம்பூர், பிப்ரவரி-23-பதிவு மற்றும் ஒழுங்குமுறை பிரச்னைகளில் சிக்கியுள்ள கோவில்களை 4-நிற வகைப்படுத்தல் அடிப்படையில் வழிநடத்தப் போவதாக, தேசிய இந்து கோவில் வழிகாட்டி குழு அறிவித்துள்ளது.
இந்த வகைப்படுத்தலில் பச்சை (Green) நிறம் முழுமையான ஆவணங்கள் கொண்ட மற்றும் அரசு பதிவேட்டில் இடம்பெற்ற (gazette செய்யப்பட்ட) கோவில்களைக் குறிக்கும்.
மஞ்சள் (Yellow) நிறமானது தனியார் அல்லது RIBI எனப்படும் முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கான நிலத்தில் உள்ள, gazette செய்யப்படாத கோவில்களாகும்.
ஆரஞ்சு (Orange) நிறம் அரசு அல்லது தோட்ட நிலத்தில், அனுமதி பெற்ற கோவில்கள்.
இந்த 2 வகை பிரிவுகளில் உள்ள பதிவுச் செய்யாத கோவில்களுக்கு நிலம் வாங்க உதவுதல் அல்லது RIBI நிலத்தைப் பெற்றுத் தருதல் போன்ற வழிகள் ஆராயப்படும்.
அதுவே சிவப்பு (Red) என்றால் எந்த ஆவணமும் இல்லாத, பதிவுச் செய்யப்படாத அல்லது நில உரிமையாளர்களுடன் ஒப்பந்தமில்லாத கோவில்களாகும்.
இந்த சிவப்பு வகை கோவில்களை, சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட கோவில்களுடன் இணைக்கும் சாத்தியப் பரிந்துரையையும் இக்குழு முன்வைக்கிறது.
இந்த வழிகாட்டி குழு, பிரதமர் மற்றும் அமைச்சர்களுடன் சந்திப்பு நடத்தி, கோவில்களின் நிலையை சரிசெய்ய ஒத்துழைப்பை பெறவும் திட்டமிட்டுள்ளது.
அதே சமயம், பதிவுச் செய்யாத கோயில்களை இடிக்கும் நடவடிக்கைக்கு 6 மாத கால தடை வேண்டும் எனவும், கடந்த வாரம் மலேசிய இந்து சங்கத் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



