
புது டெல்லி, பிப்ரவரி-25-தென்னிந்திய மாநிலமான கேரளா இனி ‘கேரளம்’ என பெயர் மாறுகிறது.
கேரளாவின் பெயரை அதிகாரப்பூர்வமாக கேரளம் என மாற்றும் மசோதாவுக்கு இந்திய அமைச்சரவை ஒருவழியாக
ஒப்புதல் அளித்துள்ளது.
2024-ஆம் ஆண்டு கேரள சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அடுத்தக் கட்டமாக, இந்திய அதிபர், இந்த பெயர் மாற்ற மசோதாவை மாநில சட்டமன்றத்திற்குப் பரிந்துரைப்பார்.
சட்டமன்றம் ஒப்புதல் அளித்ததும், ‘கேரளம்’ என்ற பெயர், அரசியல் மற்றும் அதிகாரப்பூர்வ ஆவணங்களில், அனைத்து மொழிகளிலும் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் பெயர் மலையாளத்தில் ‘கேரளம்’ என அழைக்கப்பட்டு வந்தாலும், 1956-ஆம் ஆண்டு மொழி வாரியாக இந்திய மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டதிலிருந்து அரசியலமைப்புச் சட்டத்தில் அதன் பெயர் ‘கேரளா’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்களின் பண்பாட்டு, மொழி அடையாளத்தை பிரதிபலிக்கும் இம்மாற்றத்திற்கு ஏற்ப, இனி, இந்தியாவும் உலகமும் இந்த மாநிலத்தை அதிகாரப்பூர்வமாக கேரளம் என அறியக்கூடும்.



