
ஷா ஆலாம், மார்ச்-3-கடந்த மாதம் ஷா ஆலம், செக்ஷன் 7-ல் உள்ள ஒரு பள்ளிவாசலில் உண்டியல் திருடிய மூவருக்கு, 6 மாத சிறைத் தண்டனையும், தலா RM4,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 22-ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் கும்பலாக அக்குற்றத்தைப் புரிந்ததை 26 வயது கே. தினேஷுவரன், 22 வயது ஆர். நிஷன்ராஜ் 27 வயது எஸ்.ஆர். தனேஷ் மூவரும் ஷா ஆலாம் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டனர்.
இதையடுத்து கைதான நாளிலிருந்து 6 மாதம் சிறைத் தண்டனை தொடங்க வேண்டுமென அறிவித்த நீதிபதி, அபராதம் செலுத்தத் தவறினால், கூடுதலாக 3 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றார்.
அதே திருட்டில் தொடர்புடைய இளம் குற்றவாளியான 17 வயது பையன், பொது மக்கள் யாருமின்றி தனியாக குற்றம் சாட்டப்பட்டான்.
அவனை RM1,500 ஜாமீனில் விடுவித்த நீதிபதி, அவனது நடத்தை அறிக்கையை சமூக நலத்துறையான JKM ஏப்ரல் 28-ஆம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.



