
வாஷிங்டன், மார்ச்-7-அமெரிக்கா–ஈரான் மோதல் தீவிரமாகியுள்ள நிலையில், தங்களிடம் ஈரான் “முழுமையான சரணாகதி” அடைய வேண்டும் என அதிபர் டோனல்ட் ட்ரம்ப் வற்புறுத்தியுள்ளார்.
எந்தவித பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
கடந்த வாரம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை தொடங்கிய நிலையில், ஈரான் மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் புதியத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
அதே சமயம், ஈரானும் பதிலடியாக இஸ்ரேல் மீதும் அமெரிக்க இராணுவத் தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகள் மீதும் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த நெருக்கடியைத் தீர்க்க பெயர் குறிப்பிடப்படாத நாடுகள் மத்தியஸ்த முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக ஈரானிய அதிபர் கூறிய நிலையில், பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை என ட்ரம்ப் கூறி விட்டார்.
ட்ரம்பின் இந்த கடுமையான நிலைப்பாடு, நீண்டகால போருக்கு வழிவகுக்கும் அபாயத்தை அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மத்தியக் கிழக்கு நெருக்கடியால் ஏற்கனவே உலகச் சந்தைகள் பெரும் பதற்றத்தில் உள்ளன.
கட்டார் எரிசக்தி அமைச்சர், எண்ணெய் விலை உயர்வு உலக பொருளாதாரத்தை பாதிக்கக்கூடும் என எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சிம்ம சொப்பனமாக திகழ்ந்த ஆயதொல்லாவைக் கொன்று விட்டாலும், அணுசக்தி விஷயத்தில் ஈரானை ‘மண்டியிடச்’ செய்யும் வரை ட்ரம்ப் ஓய மாட்டார் என்றே தெரிகிறது…



