
கோலாலம்பூர், மார்ச் 1-செராஸ் பகுதியில் ஒரு காரின் பக்கவாட்டு கண்ணாடியை சேதப்படுத்திய ஆடவரை போலீசார் கண்டறிந்தனர்.நேற்று இரவு மணி 8.40க்கு ஒரு நபருக்கு சொந்தமான காரின் பக்கவாட்டு கண்ணாடியை உடைப்பதைக் காட்டும் வீடியோ தொடர்பாக காவல்துறைக்கு ஒரு புகார் கிடைத்தது.
இந்த வீடியோவை @cyberjayaviral என்ற கணக்கின் உரிமையாளர் சமூக ஊடக தளமான TikTok இல் பதிவேற்றியதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் முகமட் ரோஸ்டி டாவுட்(Mohd Rosdi Daud) தெரிவித்தார்.
இந்த விவகாரம் தண்டனைச் சட்டத்தின் 427 ஆவது பிரிவு , தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் 506 மற்றும் 233 ஆகிய பிரிவுகளின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சந்தேக நபரையும் கார் உரிமையாளரையும் கண்டுபிடிப்பதற்கும், விசாரணைக்கு உதவுவதற்கும் மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்திடமிருந்து டிக்டோக் கணக்கின் உரிமையாளரை அடையாளம் காண்பதற்கும் விசாரணை இன்னும் நடைபெற்று வருவதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் முகமட் ரோஸ்டி டாவுட் சுட்டிக்காட்டினார்.
முன்னதாக, ஹோண்டா HRV காரை ஓட்டிச் சென்ற ஒருவர் காரில் இருந்து இறங்கி மற்றொரு காரின் பக்கவாட்டு கண்ணாடியை சேதப்படுத்திய பின்னர் அவர் தனது காரை ஓட்டிச் செல்லும் வீடியோ வைரலானது.



