
கோலாலம்பூர், மார்-14 – நாட்டில் மத உணர்வுகளை தூண்டும் நடவடிக்கைகள் மற்றும் தன்னிச்சையான செயல்பாடுகள் தொடர்பாக ஒருவழியாக போலீஸ் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது குறித்து, உரிமைக் கட்சித் தலைவர் பேராசிரியர் Dr. பி. ராமசாமி நிம்மதி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக சம்ரி வினோத் மற்றும் தமிம் டாஹ்ரி மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்ட சட்டத் துறைத் தலைவர் அனுமதி வழங்கியுள்ளார்.
இந்த இருவரும் தாய்லாந்துக்கு தப்பிச் சென்றுள்ள நிலையில், தாய்லாந்து அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் அவர்கள் மீண்டும் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என தேசியப் போலீஸ் படைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
IGP-யின் இந்த உத்தரவாதத்தை வரவேற்பதாகக் கூறிய ராமசாமி, ஏதோ ஒப்புக்கு இல்லாமல் உண்மையிலேயே அமுலாக்கத்தின் தீவிரத்தை இந்நடவடிக்கை புலப்படுத்தும் என நம்புவதாகக் கூறினார்.
சம்ரியும் தமிமுமம், அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராகப் போராடுவதாகக் கூறி, சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்ட நபர்கள் ஆவர்.
பார்க்கப் போனால் ஏற்கனவே இவர்கள் கைதுச் செய்யப்பட்டிருக்க வேண்டும்; ஆனால் ஏதோ காரணத்தால் அது நடக்கவில்லை.
இதனால், போலீஸ் வேடிக்கைப் பார்ப்பதாக மக்கள் மத்தியில் ஒருவித கருத்து எழுந்துவிட்டது.
இந்நிலையில், இப்போதாவது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறதே என்ற மனநிம்மதி கிடைத்துள்ளது.
ஆனாலும், ஃபிர்டாவுஸ் வோங், Cikgu Chandra போன்றோர் மீது இன்னும் சட்ட நடவடிக்கைப் பாயாமல் இருப்பது ஆச்சரியளிப்பதாக ராமசாமி குறிப்பிட்டார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மலேசியா வந்தபோது பிப்ரவரி 7-ஆம் தேதி கோலாலம்பூரில் உள்ள SOGO பேரங்காடி முன்பு நடைபெற்ற போராட்டத்தை ஏற்பாடு செய்ததற்கும், பினாங்கில் இந்து மதத்தை அவமதித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலும் சம்ரி மீது குற்றச்சாட்டுகள் பதிவுச் செய்யப்படவுள்ளன.
அதே சமயம், லங்காவியில் ஒரு கோவிலருகே இருந்த திரிசூலம் மீது காலடி வைத்த சம்பவம் தொடர்பாக தமிம் டாஹ்ரி மீது வழக்கு பதிவுச் செய்யப்படவுள்ளது.
அண்மையக் காலமாக “சட்டவிரோத” கோவில்கள் குறித்து ஏற்பட்ட போராட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் சில வன்முறை சம்பவங்கள் காரணமாக நிலைமை பதற்றமாகிய நிலையில், சட்ட ஒழுங்கை பாதுகாக்க போலீஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது பரவலாக வரவேற்பைப் பெற்றுள்ளது.



