
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 16-பெட்டாலிங் ஜெயா , செக்சன் 14 இல் உள்ள
நகைக்கடையில் நடைபெற்ற கொள்ளை முயற்சியின்போது பாதுகாவலர் ஒருவரால் சுடப்பட்டதால் காயம் அடைந்த கொள்ளையன் இறந்தான்.
இன்று காலை 11 மணியளவில் வாடிக்கையாளர் எவரும் அக்கடையில் இல்லாத வேளையில் கூர்மையான ஆயுதத்துடன் திடீரென உள்ளே புகுந்த சந்தேகப் பேர்வழியுடன் பாதுகாவலர்களில் ஒருவர் போராடிக்கொண்டிருந்தபோது அதைப் பார்த்த மற்றொரு பாதுகாவலர் தம்மிடமிருந்த துப்பாக்கியால் இரண்டு முறை அந்த ஆடவனை சுட்டதாக நம்பப்படுகிறது.
கடுமையாக காயம் அடைந்த அந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட போதிலும் அதன்பிறகு அவன் மரணம் அடைந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது.
இதற்கு முன்னதாக புதிதாக திறக்கப்பட்ட அந்த நகைக்கடைக்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஆடவன் அக்கடையினுள் நுழைந்ததாக கூறப்பட்டது. எனினும் இந்த சம்பவத்தின்போது நகைகள் எதுவும் கொள்ளையடிக்கப்படவில்லை.
இச்சம்பவம் குறித்து பெட்டாலிங் ஜெயா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த நகைக்கடையில் கொள்ளை முயற்சி நடந்ததை பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் சம்சுடின் மமாட் உறுதிப்படுத்தியதோடு இது குறித்து மேல் விவரங்களை தெரிவிப்பதற்கு அவர் மறுத்துவிட்டார். இந்த விவகாரம் தொடர்பில் விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என அவர் தெரிவித்தார்.



