
கோலாலாம்பூர், மார்ச்-17 – பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் இணைய ம.இ.கா எந்தவோர் அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்கவில்லை என, அதன் தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் தெளிவுப்படுத்தியுள்ளார்.
அதை விட முக்கியமாக, தேசிய முன்னணி கூட்டணியிலிருந்து விலகுவதா இல்லையா என்பது குறித்தே ம.இ.கா இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என, தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் குறிப்பிட்டார்.
பெரிக்காத்தான் நேஷனலில் சேர ம.இ.கா செய்த விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், இன்றிரவு அதற்கான கடிதம் கட்சித் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரனிடம் ஒப்படைக்கப்படும் என்றும், பெரிக்காத்தான் பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ தாக்கியுடின் ஹசான் முன்னதாக கூறியிருந்தார்.
இதையடுத்து பெரிக்காத்தான் கூட்டணி கட்சிகளின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், அதனை மறுக்கும் விதமாக சரவணின் அறிக்கை வெளியாகியிருப்பது புதியத் திருப்பமாக அமைந்துள்ளது.
குறிப்பாக தக்கியுடின் இன்று விக்கினேஸ்வரனை சந்திக்கவிருப்பது எனக்கு தெரியாது என்றும், அப்படி ஏதும் இருந்தால் கட்சித்தலைவர் தன்னிடம் கூறியிருப்பார் என சரவணன் தெரிவித்துள்ளார்.



