
ஷா அலாம், மார்ச் 18-பண்டிகைக் காலங்களில் பட்டாசுகளைக் கடத்துவதற்குப் பயன்படுத்தப்படும் ஐந்து முக்கிய வழிமுறைகளை சுங்கத்துறை கண்டறிந்துள்ளது.
சந்தை தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, கொண்டாட்டங்களுக்கு முன்னதாக, அனுமதி இல்லாமல் பட்டாசுகளைக் கடத்துதல் மற்றும் சேமித்து வைத்தல் போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சுங்கத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ அம்ரான் அகமட் ( Amran Ahmad ) தெரிவித்தார்.
அனுமதி பெற்ற இறக்குமதியாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட பட்டாசுகளுடன் அங்கீகரிக்கப்படாத பட்டாசுகளையும் விவரக்குறிப்பில் சேர்த்து விடுவது கண்டறியப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
சில பட்டாசுகள், காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற கலப்புப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகளில் மறைத்து வைக்கப்பட்டு, எல்லை நுழைவு மையங்கள் மூலமாக கடத்தப்படுகின்றன என்று அம்ரான் சுட்டிக்காட்டினார்.
இது தவிர நாட்டின் எல்லைகளில் சட்டவிரோத பாதைகளை பயன்படுத்தும் வாகனங்களையும் சுங்கத்துறை கண்டறிந்துள்ளது.
சட்டவிரோத படகுத்துறைகள் அல்லது அங்கீகரிக்கப்படாத இறங்குமிடங்களில் நிறுத்தப்படும் படகுகளையும் தங்களது கடத்தல் நடவடிக்கைக்கு கடத்தல்காரர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு நாடு முழுவதும் 2 கோடியே 26 லட்சத்து 92,963 ரிங்கிட் மதிப்புள்ள பட்டாசுகள் மற்றும் வான வெடிகள் பறிமுதல் செய்யப்பட்ட தகவலையும் Amran Ahmad வெளியிட்டார்.



