
கோலாலம்பூர், மார்ச் 18 – ப்ளூம்பெர்க் (Bloomberg) சம்பந்தப்பட்ட ஒரு விசாரணையில் போலீஸ்துறை அனைத்துலக ஒத்துழைப்பை நாடுகிறது.
இந்த விவகாரத்தோடு தொடர்புடைய சில நபர்கள் வெளிநாடுகளில் வசிப்பதாக நம்பப்படுகிறது. இதுதவிர அதிகாரிகள் மெனாரா பெட்ரோனாஸில் உள்ள Bloomberg அலுவலகத்திற்கு சென்று பல ஊழியர்களிடம் விசாரணை நடத்தியுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் (Mohd Khalid Ismail ) தெரிவித்தார்.
மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க, அரசாங்கங்களுக்கு இடையிலான வழிகள் அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மூலமான ஒத்துழைப்பு தேவைப்படும் என அவர் இன்று புக்கிட் அமானில் செய்தியாளர்களிடம் பேசியபோது கூறினார்.
விசாரணையை முன்னெடுத்துச் செல்வதில் எல்லை தாண்டிய ஒருங்கிணைப்பு மிக முக்கியமானது என்பதோடு நிர்வாகத்தைக் கவிழ்க்க சதித்திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் பொறுப்பை அரசாங்கம் போலீஸ் துறையிடம் விட்டுவிட்டதாகவும் முகமட் காலிட் தெரிவித்தார்.
முன்னதாக, அரசாங்கத்தையும் தேசிய நிலைத்தன்மையையையும் சீர்குலைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட திட்டம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருவதாக முகமட் காலிட் கூறினார்.
மேலும், இந்தக் குற்றச்சாட்டுகளில் உள்நாட்டில் செல்வாக்கு மிக்க ஒரு நபரும், அனைத்துலக ஊடக நிறுவனமும் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாகியின் பங்குரிமைகள் குறித்த விசாரணை அறிக்கைகளுக்குப் பின்னால் உள்ள பத்திரிகையாளரை அடையாளம் காண்பதற்காக,போலீஸ் துறை Bloomberg கின் கோலாலம்பூர் அலுவலகத்திற்குச் சென்றதாக இணையதளம் பதிவேடு ஒன்று செய்தி வெளியிட்டது.



