
கொல்கத்தா, மார்ச் 23 – ஆறு மாத கர்ப்பிணியான தனது மனைவி பூஜாவை கொலை செய்த பின் அவரது உடலை பிளாஸ்டிக் பையில் போட்டு கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்திருந்த கணவன் கைது செய்யப்பட்டான்.
இக்கொலை தொடர்பில் அப்பெண்ணின் மாமியார் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் லெனின் நகரிலுள்ள தனது வீட்டில் 24 வயது பூஜா மொண்டல் என்ற கர்ப்பிணி கொலை செய்யப்பட்டபின் அவரது உடல் மறைத்து வைத்திருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
பூஜா கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இந்தத் தம்பதியினருக்குத் திருமணமாகி சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகியிருந்த போதிலும் வேலையில்லாமல் இருந்து வந்த தனது கணவரும் மற்றும் மாமியார் வீட்டினரும் அடிக்கடி பணம் கேட்டு பூஜாவை அடித்து துன்புறுத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.



