
காப்பார், மார்ச்-23-கடந்த வாரம் காப்பார், மேருவில் சந்தேகத்தின் அடிப்படையில் கைதான 41 வயது இந்திய ஆடவர்,காஜாங் சிறைச்சாலையில் மர்மமான முறையில் மரணமந்துள்ளார்.
இது குடும்பத்தாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செவ்வாய்க்கிழமை கைதாகி, வியாழக்கிழமை நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்ட போது, 1,000 ரிங்கிட் ஜாமீன் தொகையைச் செலுத்தாததால் அவர் காஜாங் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
இந்நிலையில், ஜாமீன் பணத்தை ஏற்பாடு செய்து, நாளை செவ்வாய்க்கிழமை தனது சகோதரரை அழைத்து வர அவரின் அக்காள் லெட்சுமி எண்ணியிருந்தார்.
ஆனால், சனிக்கிழமை இரவு 8 மணிக்கு மேல் அந்நபர் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக காஜாங் சிறையிலிருந்து தகவல் வந்துள்ளது.
மறுநாள் காலை தம்பியைப் பார்க்க கிளம்பிய போது, அவர் இறந்துவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டதால் குடும்பமே பெரும் சோகத்தில் மூழ்கியது.
மரணத்திற்கான காரணம் குறித்து குடும்பம் வற்புறுத்தி கேட்டதற்கு, கொடுக்கப்பட்ட விளக்கத்தில் தங்களுக்கு திருப்தி இல்லை என குடும்பத்தார் தெரித்துள்ளனர். நியாயம் வேண்டும் என கோருகின்றனர்.
இன்றைய இறுதிச் சடங்கு முடிந்த பின்னர் இது குறித்து போலீஸில் புகார் செய்யப் போவதாகவும் குடும்பத்தார் கூறியுள்ளனர்.



