
கோலாலம்பூர் , மார்ச் 24 -தற்போது நாட்டைப் பாதித்து வரும் வெப்ப அலை ஜூன் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் நடுப்பகுதிக்கும் ஏப்ரல் நடுப்பகுதிக்கும் இடையில் வெப்பநிலை உச்சத்தை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், காற்றின் போக்கு பலவீனமடைவதால், இந்த வார இறுதியில் இருந்து மழைப்பொழிவு அதிகரிக்கும் என மெட்மலேசியா எதிர்பார்க்கிறது.
குறிப்பாக தீபகற்பத்தின் வட மாநிலங்களில், வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை எட்டக்கூடும் என்று வானிலை ஆய்வுத் துறையான (மெட்மலேசியா) தலைமை இயக்குநர் ஹிஷாம் அனிப் (Hisham Anip ) தெரிவித்தார்.
குறைந்த மேகமூட்டம் மற்றும் சூரியன் அப்பகுதிக்கு நேர் மேலே இருப்பதால், வடகிழக்குப் பருவமழையின் முடிவில் வெப்ப அலை ஏற்படுவது ஒரு பொதுவான நிகழ்வு என்று அவர் சுட்டிக்காட்டினார். பருவமழை அடுத்த வாரம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், வெப்பநிலை அதிகமாகவே இருக்கும்.
குறைந்தது தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு தினசரி அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை நீடித்தால் முதலாவது வெப்ப நிலை எச்சரிக்கையாக கருதப்படுகிறது.
தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு வெப்பநிலை 37 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை நீடித்தால் வெப்ப நிலை அளவு 2 என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
இதனிடையே வாகனத்தில் விடப்பட்ட ஒரு குழந்தையின் மரணம் உட்பட, இந்த ஆண்டு மலேசியாவில் வெப்பம் தொடர்பான 15 சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று சுகாதார அமைச்சர் சுல்கெப்லி அகமட் ( Zulkefly Ahmad) தெரிவித்தார்



