
சென்னை, மார்ச்-25-அடுத்த மாத தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தத்தம் கூட்டணிகளை ஏறக்குறைய இறுதிச் செய்திருப்பதால், தேர்தல் திருவிழா சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
ஆளும் கட்சியான தி.மு.க, 20-க்கும் மேற்பட்ட கட்சிகளை உள்ளக்கிய மாபெரும் கூட்டணியை அமைத்திருப்பதால், நீண்ட இழுபறிக்குப் பிறகு தொகுதி பங்கீடு ஏறக்குறைய முடிவடைந்துள்ளது.
தி.மு.க மட்டுமே 168 இடங்களில் போட்டியிடும் நிலையில், கூட்டணியிலிருந்து விலகும் என எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்கள் இறுதிச் செய்யப்பட்டுள்ளன.
முதன் முறையாக தி.மு.க கூட்டணியில் இணைந்துள்ள விஜயகாந்தின் தே.மு.தி.க கட்சிக்கு 10 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்ட வேளை, திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு தலா 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
வைகோவின் ம.தி.முகவுக்கு வெறும் 4 தொகுதிகளே தரப்பட்டுள்ள நிலையில், மற்ற சிறிய கட்சிகளுக்கு 1 முதல் 2 இடங்கள் வரை தந்து, கூட்டணியை தி.மு.க தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
இவ்வேளையில், அதிரடி திருப்பமாக, நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தலில் போட்டியிடுவதில்லை என அறிவித்துள்ளது.
தாங்கள் போட்டியிட தி.மு.க வழங்க முன் வந்த தொகுதிகளின் எண்ணிக்கையும், சொந்த சின்னத்திற்கு பதிலாக தி.மு.கவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்ற கோரிக்கையும் ஏற்றுக் கொள்ள முடியாததால், தேர்தலில் போட்டியில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளதாக கமலஹாசன் சொன்னார்.
என்றாலும், தேர்தலில் தி.மு.க கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதோடு, பிரச்சாரம் செய்யவும் அவர் உறுதியளித்தார்.
இவ்வேளையில், பிரதான எதிர்கட்சியான அ.தி.மு.க கூட்டணியும் தொகுதி பங்கீட்டை சுமூகமாக முடிந்து புதுத் தெம்புடன் காணப்படுகிறது.
அ.தி.மு.க மட்டுமே 170-க்கும் குறையாத தொகுதிகளில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படும் வேளை, முக்கியக் கூட்டணி கட்சியான பாரதீய ஜனதா கட்சிக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பாரதீய ஜனதா கட்டுப்பாட்டில் தான் அ.தி.முக. இயங்குவதாக பரவலாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அதனை முறியடிக்கும் விதமாக, தி.மு.க கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை விட ஓரிடம் குறைவாக 27 தொகுதிகள் BJP-க்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் கூட்டணியில் அ.தி.மு.கவின் கையே ஓங்கியிருப்பதை, அதன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நிரூபித்துள்ளார்.
இதனிடையே, ஆட்சி – அதிகாரத்தில் பங்கு தருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு ஆசை காட்டிய போதும், யாருமே கூட்டணிக்கு வராததால், நடிகர் விஜயின் TVK எனப்படும் தமிழக வெற்றிக் கழகம் தனித்து விடப்பட்டுள்ளது.
ஒரே ஒரு சிறிய முஸ்லீம் கட்சியின் ஆதரவைத் தவிர வேறு யாருமில்லாமல், TVK 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
சீமானின் நாம் தமிழர் கட்சி வழக்கம் போல் இம்முறையும் கூட்டணி வைக்காமல் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகிறது.
தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, திருத்தணி முருகனுக்கு பூஜை செய்து, சீமானும் சூறாவளி பிரச்சாரத்தைத் தொடங்கி விட்டார்.
வேட்புமனுத் தாக்கல் மார்ச் 30-ஆம் தேதி தொடங்கும் நிலையில், ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது…



