Latestமலேசியா

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

ஷா ஆலம், ஏப்ரல்-3-கடந்த ஞாயிற்றுக்கிழமை கிள்ளான், ஜாலான் ராயா பாராட்டில் நிகழ்ந்த கார் விபத்தில் உயிரிழந்த அமிருல் ஹபீஸ் ஓமரின் (33) குடும்பத்தார், சமூகப் பாதுகாப்பு அமைப்பான பெர்கேசோவின் (PERKESO) கீழ் மாதந்தோறும் RM2,888.17 ‘பென்சென் பனாகாட்’ (Pencen Penakat) ஓய்வூதியத்தைப் பெறத் தகுதி பெற்றுள்ளனர்.

உயிரிழந்த அமிருல் ஹபீஸ், TVH மலேசியா நிறுவனத்தில் கடந்த 15 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்ததோடு, 1969-ஆம் ஆண்டு தொழிலாளர் சமூகப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒரு தீவிரப் பங்களிப்பாளராகவும் இருந்துள்ளார்.

பெர்கேசோ குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் முகமது அஸ்மான் அஜிஸ் முகமது இன்று ஷா ஆலமில் உள்ள அமிருல் ஹபீஸின் இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது மனைவி நூர் நாடியா அப்துல் மஜித்திடம் (32) ஈமச்சடங்கு பலனாக (FPM) RM3,000 மற்றும் ஓய்வூதிய ஆவணங்களை வழங்கினார்.

“அமிருல் ஹபீஸின் சீரான பங்களிப்பு அவரது வாரிசுகளுக்கு இந்த நிதி உத்தரவாதத்தைப் பெற்றுத் தந்துள்ளது.”

“அவரது மனைவிக்கு வாழ்நாள் முழுவதும் இந்த ஓய்வூதியம் வழங்கப்படும். அதே வேளையில், அவரது மூன்று பிள்ளைகளும் தங்களின் 21 வயது வரை அல்லது முதல் பட்டப்படிப்பை முடிக்கும் வரை கல்வி நிதி உதவியைப் பெறுவர்,” என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

உயிரிழந்த தம்பதியினருக்கு முஹம்மது ஆகிப் அம்ஷ்யார் (9), முஹம்மது அபிப் இஸ் ரைகால் (7) மற்றும் நூர் ஹுமைரா (2) ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

இந்தச் சந்திப்பின் போது, தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முதலாளிகள் முறையாகப் பங்களிப்பு செய்ய வேண்டியதன் அவசியத்தை டாக்டர் முகமது அஸ்மான் வலியுறுத்தினார்.

நிர்வாகச் செலவுகளைக் குறைப்பதற்காகப் பங்களிப்பு செய்யத் தவறும் முதலாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

மேலும், கடந்த மார்ச் 31 முதல் நடைமுறைக்கு வந்துள்ள 2025-ஆம் ஆண்டு கிக் பணியாளர் சட்டத்தின் (சட்டம் 872) கீழ், நாட்டின் 1.64 மில்லியன் கிக் தொழிலாளர்களுக்கும் இனி பெர்கேசோ பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 11.47 மணியளவில், மது மற்றும் போதைப்பொருள் அருந்திய ஒரு நபரால் ஓட்டி வரப்பட்ட கார் மோதியதில் அமிருல் ஹபீஸ் உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக ஆர். சக்தி கணபதி (28) என்ற ஆய்வக உதவியாளர் மீது கிள்ளான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!