
செப்பாங், ஏப்ரல்-10-மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் கூறி, சீனப் பிரஜையான பயணி ஒருவர் விமானத்திலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார்.
KLIA-விலிருந்து விமானம் புறப்படுவதற்குச் சற்று நேரத்திற்கு முன் இச்சம்பவம் நிகழ்ந்தது.
விமானத்தில் ஏறிய அந்தப் பயணி, விமானப் பணியாளரான ஒரு பெண்ணை உடல்ரீதியாக தகாத முறையில் தொட்டதால் ஏற்பட்ட பிரச்னை, இரகளையானது.
இதனால் சக பயணிகளின் பாதுகாப்பை உறுதிச் செய்யும் வகையில், விமானி அளித்த புகாரின் பேரில் விமான நிலையப் போலீஸார் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள், அந்த ஆண் பயணியைக் கீழே இறக்கும் வீடியோக்கள் வைரலாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து விமானத்தில் கூடுதல் பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட்டு, சில மணிநேரத் தாமதத்திற்குப் பிறகு விமானம் இலக்கு நோக்கி புறப்பட்டுச் சென்றது.
வெளியேற்றப்பட்ட அப்பயணி மீது விமான போக்குவரத்து பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.



