
புத்ராஜெயா, ஏப்ரல்-14-மலேசிய இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ரா (MITRA), உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கான IPT 5.0 நிதி உதவியை விநியோகிக்கத் தொடங்கியுள்ளது.
B40 குடும்பங்களைச் சேர்ந்த, 2025/2026 கல்வியாண்டுக்கான முதலாமாண்டு டிப்ளோமா மற்றும் இளங்கலைப் பட்டப்படிப்பு மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைகின்றனர்.
மாணவர்களின் ஆரம்பக் கால நிதிச் சுமையைக் குறைத்து, அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்புகளை உறுதிச் செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
அவ்வகையில், நிர்ணயிக்கப்பட்ட தகுதி நிபந்தனைகளைப் பூர்த்திச் செய்த 4,165 இந்திய மாணவர்கள், இந்த நிதி உதவியைப் பெறத் தகுதியானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நிதி விநியோகம் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி முதல், கட்டம் கட்டமாகத் தொடங்கப்பட்டுள்ளதாக, மனித வள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
நிதி உதவி பெறும் மாணவர்களின் முழுப் பட்டியல் இன்று, ஏப்ரல் 14 முதல் மித்ராவின் அதிகாரப்பூர்வ இணைய அகப்பக்கத்தில் பதிவேற்றப்படும்.
தற்போது மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் மித்ரா, அதன் புதிய தலைமை இயக்குநர் ரவீந்திரன் நாயர் தலைமையில் சீரமைக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது.
இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு பொது மக்கள் வேலை நாட்களில் 03-8886 6192 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது spl@mitra.gov.my என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.



