Latestமலேசியா

ஹோங் கோங்கில் 12வது அனைத்துலகப் புத்தாக்கப் போட்டியில் அம்பாங் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனை

கோலாலாம்பூர், ஏப்ரல்-17,-ஹோங் கோங்கில் 12வது அனைத்துலகப் புத்தாக்கப் போட்டியில் அம்பாங் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனைசமையலறையில் சுகாதாரத்தை உறுதிச் செய்யும் ‘விவேகக் கத்தி வைப்பான்’ (Smart Knife Holder) எனும் புத்தாக்கக் கருவியைக் கண்டுபிடித்து, ஹோங் கோங் அனைத்துலகப் புத்தாக்கப் போட்டியில் அம்பாங் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உலகத் தரத்திலான சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

மார்ச் 12 முதல் 15 வரை ஹோங் கோங்கில் நடைபெற்ற 12-வது அனைத்துலக மாணவர் புத்தாக்கக் கண்டுபிடிப்புப் போட்டியில் (HKISIIC 2026) தான், மலேசியாவுக்குப் பெருமை சேர்க்கும் வகையில், இம்மாணவர்கள் இவ்வெற்றியைப் பதிவுச் செய்தனர்.

ஜெய் கணேஷ், டிஷிதா மற்றும் துஷாந்த் நாயர் ஆகிய மூன்று இளம் விஞ்ஞானிகள் உருவாக்கிய இக்கருவி, UVC ஒளியைப் பயன்படுத்தி கத்திகளில் உள்ள பாக்டீரியா மற்றும் வைரஸ்களை 20 நிமிடங்களில் தானாகவே அழிக்கும் திறன் கொண்டது.

இக்கருவி, எதிர்காலத்தில் விவேகக் கைப்பேசி எச்சரிக்கை வசதியுடன் மேம்படுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே 2025-ஆம் ஆண்டு ITEX போட்டியில் சிறந்த கண்டுபிடிப்புக்கான விருதை வென்றிருந்த இம்மாணவர்கள், தற்போது ஹோங் கோங்கில் ‘அனைத்துலகப் புத்தாக்கக் கிண்ணம்’ மற்றும் ‘ஹோங் கோங் சிறப்பு விருது’ ஆகியவற்றைத் தட்டிச் சென்றுள்ளனர்.

வெள்ளிப் பதக்கம் மற்றும் ரொக்கப் பரிசையும் வென்ற இம்மாணவர்களின் சாதனையோடு, அவர்களின் வழிகாட்டி ஆசிரியருக்கும் ‘ஆசிரியர் அங்கீகார விருது’ வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

உலகத் தரம் வாய்ந்த இந்தப் போட்டியில் நமது மாணவர்கள் முத்திரை பதித்திருப்பது ஒட்டுமொத்த இந்தியச் சமூகத்திற்கும் பெருமையளித்துள்ளது.

இளையத் தலைமுறையினரின் இத்தகைய கண்டுபிடிப்புகள் எதிர்காலத்தில் நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வித்திடும் என நம்புவோம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!