
ஜாசின், ஏப்-17- அபாயகரமான முறையில் பேருந்தை ஓட்டிய குற்றச்சாட்டை இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, ஒரு பேருந்து ஓட்டுநருக்கும், அவரது காதலிக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்களான, 36 வயதான ஆரிப் பஹ்மி அப்துல் சலாம் (Arif Fahmi Abd Salam) மற்றும் 21 வயதான நூர் அடிலா நஜ்வா இல்ஹாம் அமீருல்லாஹ் (Nur Adila Najwa Ilham Ameerrullah, ) ஆகியோர், மாஜிஸ்திரேட் மஸானன் சினின் (Mazanan Sinin ) முன்னிலையில் இந்தக் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
ஆரிப் பஹ்மிக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதே வேளையில்
குற்றத்தை ஒப்புக்கொண்ட தனக்கு நீதிமன்றம் கருணை காட்ட வேண்டும் என நூர் அடிலா இதற்கு முன் மாஜிஸ்திரேட் மஸானன் சினிடம் முறையிட்டார்.
தனது கருணை மனுவில் எஸ்.பி.எம் தேர்வில் தான் 8A 2B முடிவுகளைக் பெற்றதாகவும், குழந்தைப் பருவம் முதல் தனது பாட்டியால் வளர்க்கப்பட்டதாகவும், படிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தும் அதற்கான செலவை ஏற்க இயலவில்லை என்றும், மேலும் தனது படிப்பைத் தொடர ஏதுவாக குறைந்த தண்டனை வழங்கும்படி நூர் அடிலா கேட்டுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு ஆறு மாத சிறைத் தண்டனை மற்றும் , தலா 5,000 ரிங்கிட் அபராதம் விதிப்பதாக மாஜிஸ்திரேட் தீர்ப்பளித்தார்.
APE 9588 என்ற பதிவு எண் கொண்ட பேருந்தை, பொதுமக்களுக்கு அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் பாமியும் , நுர் அடிலாவும் பேருந்தை ஓட்டியதாக கூட்டாக குற்றம் சாட்டப்பட்டனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மணி 7.30 அளவில் , மலாக்கா, ஜாசின் மாவட்டத்தில் உள்ள வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் தெற்குப் பாதையில் உள்ள பெம்பன் ஓய்வு பகுதியிலிருந்து வெளியேறும் வழியில் அவர்கள் இக்குற்றத்தை புரிந்ததாக குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டது.



