
தெலுக் இந்தான், ஏப் 17 – தெலுக் இந்தான் பெக்கான் பாரு அருகே இன்று
தனது வீட்டில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில், 69 வயது ஆடவர் ஒருவர் பாராங்கினால் தாக்கியதால் உயிரிழந்தார்.
காலை 6 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், முகமூடி அணிந்த மூன்று கொள்ளையர்களில் ஒருவன் தான் வைத்திருந்த பாராங் கத்தியினால் அவரை தாக்கியுள்ளான்.
கையில் கத்திக் குத்துக்கு உள்ளானதால் கடுமையாக காயத்திற்குள்ளான ஜெயகோபி சம்பவம் நடந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
விடியற்காலையில் தனது வீட்டின் முற்றத்தில் பூஜைக்காக ஜெயகோபியின் மனைவி தயாராகிக் கொண்டிருந்தபோது திடீரென சுவர் ஏறிக் குதித்த முகமூடி அணிந்த கொள்ளையர்கள் அவ்வீட்டில் நுழைந்தனர்.
இந்த கொள்ளையர்களில் ஒருவன் ஜெயகோபியின் மனைவி புனிதவள்ளியை சத்தம் போட வேண்டாம் என வாயை மூடி கத்தி முனையில் மிரட்டியுள்ளான்.
இந்த வேளையில் 67 வயதுடைய புளிதவள்ளி பயத்தினால் கூச்சல்போடவே அவரது கணவர் ஜெயகோபி வீட்டின் உள்ளேயிருந்து வெளியே வந்தபோது அவரை கொள்ளையர்களில் ஒருவன் தான் வைத்திருந்த பாராங்கினால் தாக்கியுள்ளான்.
ஜெயகோபி மனைவி அணிந்திருந்த ஒரு சங்கிலி மற்றும் பூஜை அறையிலுள்ள பணத்தையும் எடுத்துக் கொண்டு கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஹிலிர் பேரா மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் சுவா கோக் லியான் ( Chua Kok Lian,) தெரிவித்தார். ஜெயகோபியின் மனைவிக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை .
20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் என நம்பப்படும் மூன்று சந்தேக நபர்களைக் போலீசார் தற்போது தீவிரமாகத் தேடி வருவதாகவும், இந்த விவகாரம் தண்டனைச் சட்டத்தின் 302-வது பிரிவின் கீழ் கொலைக் குற்றத்திற்காக விசாரிக்கப்பட்டு வருவதாகவும் சுவா கூறினார்.



