
அலோர் காஜா, ஜூலை-17-மலாக்கா, அலோர் காஜாவில் 9 மாதக் குழந்தை காயமடைந்த விவகாரத்தில், குழந்தையைப் பராமரித்து வந்த தம்பதியினரை போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.
டுரியான் துங்கால், தாமான் புக்கிட் தம்புன் பெர்டானாவில் உள்ள ஒரு வீட்டில், அக்குழந்தை காயமடைந்த சம்பவம் குறித்து புதன்கிழமை புகாரளிக்கப்பட்டது.
இதனையடுத்து, 41 வயது ஆடவர் மற்றும் அவரது 34 வயது மனைவி கைதாகியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட குழந்தைக்கு நெற்றியில் வீக்கமும், முதுகில் காயங்களும் ஏற்பட்டுள்ளதாக மலாக்கா போலீஸ் தெரிவித்துள்ளது.
குழந்தை தற்போது மலாக்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.
தாங்கள் குழந்தையைப் பராமரித்து வந்தபோது, தவழ்ந்த குழந்தை தரையில் மோதி, கட்டிலுக்கு அடியில் சிக்கியதால் இந்த காயம் ஏற்பட்டதாக அந்தத் தம்பதியினர் தரப்பில் கூறப்படுகிறது.
இருப்பினும், மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பின்னரே காயத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும்.
கைதான தம்பதியினர் 7 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
2001-ஆம் ஆண்டு சிறார் குழந்தைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு 20,000 ரிங்கிட் அபராதம் அல்லது 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.



