
புத்ராஜெயா, ஏப்ரல்-20,
KLIA டெர்மினல் 1 முனையத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி ஏற்பட்ட பயணப் பெட்டி கையாளுதல் முறை பாதிப்பு குறித்து, போக்குவரத்து அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ ஸ்ரீ ஜனசந்திரன் தலைமையில் இன்று அவசரக் கூட்டம் நடைபெற்றது.
இந்தத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகப் பயணிகளின் உடைமைகள் கிடைப்பதில் சுமார் 4 மணிநேரம் வரை தாமதம் ஏற்பட்டது.
இதையடுத்து அவசரக் கூட்டத்திற்குப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் உத்தரவிட்டதற்கு ஏற்ப, இன்று அக்கூட்டம் நடைபெற்றது.
அவ்வகையில், இந்தப் பிரச்னையை அமைச்சு மிகவும் தீவிரமாகக் கருதுவதாகவும், இதற்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் ஜனசந்திரன் வலியுறுத்தினார்.
பயணிகளின் நம்பிக்கையைப் பாதுகாப்பதே அமைச்சின் முதன்மை இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டார்.
மலேசிய விமான நிலையங்கள் நிறுவனமான MAHB, பொது விமானப் போக்குவரத்து அதிகாரத் தரப்பான CAAM மற்றும் விமான நிறுவனப் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், எதிர்காலத்தில் இத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டால் அதனை விரைவாகக் கையாள்வதற்கான புதிய SOP நடைமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
குறிப்பாக, பயணிகளுடனான தகவல் தொடர்பு மற்றும் அவசரகாலத் திட்டங்களை வலுப்படுத்துவது குறித்து இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
தற்போது பாதிப்புகள் சரிசெய்யப்பட்டுள்ள போதிலும், மீண்டும் இத்தகைய சம்பவங்கள் நிகழாமல் இருப்பதை உறுதிச் செய்யத் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.



