
ஈப்போ, ஏப்-23-தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு மிகப் பெரிய அங்கீகாரமாக தேசிய நூலகத்தின் உயரிய விருதான தேசிய நூல் விருது உள்நாட்டைச் சேர்ந்த ஐந்து தமிழ் எழுத்தாளர்களுக்கு வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஈப்போ இந்திரா மூலியா அரங்கில் நடைபெற்ற வட மாநில ஒற்றுமை வாரத்தை தொடக்கி வைத்த ஒற்றுமைத் துறை துணை அமைச்சர் ஆர். யுனேஸ்வரன் வெற்றி பெற்ற எழுத்தாளர்களுக்கு இந்த விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
இந்த விருதைப் பெற்றவர்களில் 17 வயது மாணவர் திவாகர் ராமச்சந்திரனும் ஒருவராவார். அவர் எழுதிய சிறகுகள் முலைத்த தருணம் என்ற சிறுகதை நூலுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
சிறார் இலக்கிய பிரிவில் கே.பாலமுருகன் எழுதிய உயாங் மலை என்ற நாவல் எழுத்தாளர் பிரிவிலும், பதிப்பாளர் பிரிவிலும் இரண்டு விருதுகளை வென்றது.
இந்த நாவல் கேமரன் மலையில் வாழக்கூடிய செமாய் பழங்குடி மக்களின் வாழ்வியலையும் நம்பிக்கைகளையும், இயற்கையின் மீது அவர்கள் கொண்டுள்ள தீராத காதலையும் வெளிப்படுத்தக்கூடிய படைப்பாகும்.
மேலும் டாக்டர் தமிழ்செல்வன் ராமேஸ், டாக்டர் எஸ். அருணாசலம் , அண்ணாமலை சவரிமுத்து, ஆகியோரும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட இதர எழுத்தாளர்கள் ஆவர்.
இரண்டாம் உலகப் போருக்கு முன்பும் ஜப்பானியர் ஆட்சியின்போதும் தோட்டப்புறப் பாட்டாளிகள் வாழ்வாதாரத்தையும் இன்னல்களையும் போராட்டங்களையும் படம் பிடித்துக் காட்டும் சஞ்சீவினி என்ற வரலாற்று நாவலை அண்ணாமலை சவரிமுத்து எழுதியிருந்தார்.
வால் புரோக் தோட்ட பள்ளியின் முன்னாள் மாணவரும் , கல்வி உளவியலாளராக இருந்துவரும் டாக்டர். தமிழ்ச்செல்வன் ரமேஷ் எழுதிய கற்பித்தல் மற்றும் கற்றலில் நேர்மறை உணர்வுகள் ஆங்கில மின்னூலுக்கான தேசிய நூலக புத்தக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இதனிடையே இந்த நிகழ்ச்சியில் அதிக வாசகர்கள் படித்த Jalan Tegak என்ற புத்தகத்தை எழுதிய மூவார் நாடாளுமன்ற உறுப்பிர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மானுக்கு வழங்கி சிறப்பிக்கப்பட்டது. அவர் தனது அரசியல் பயணத்தில் ஏற்பட்ட அனுபவங்களை மையமாகக் கொண்டு அந்த புத்தகத்தை எழுதியிருந்தார்.



