
கோலாலாம்பூர், ஏப்ரல்-23-மலேசிய மக்கள் சக்தி கட்சி மற்றும் Friends of BN தோழமைக் கட்சிகள் தேசிய முன்னணிக் கூட்டணியில் உறுப்புக் கட்சிகளாக இணைவதற்கு ம.இ.கா அதன் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது.
இன்று ம.இ.கா தலைமையகத்தில் அக்கட்சியின் தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரனைச் சந்தித்து பேசியபோது அந்த உத்தரவாத்தை அவர் வழங்கியதாக, மக்கள் சக்தி தலைவர் டத்தோ ஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் கூறியுள்ளார்.
மக்கள் சக்தி கட்சி தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சியாக சேர ம.இ.கா ஒரு தடையாக இருக்காது; மாறாக, இது தொடர்பாக BN தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடியிடம் தாமே பரிந்துரைக்கத் தயாராக இருப்பதாகவும் விக்னேஸ்வரன் உறுதியளித்ததாக தனேந்திரன் சொன்னார்.
மிகவும் இணக்கமான சூழலில் நடைபெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கச் சந்திப்பில் மக்கள் சக்தி கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஆர்.கே. ரமேஷ், உதவித் தலைவர் கே. குகேஸ்வரன் மற்றும் உச்சமன்ற உறுப்பினர் S.B.பாலா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
தான் ஸ்ரீ விக்னேஸ்வரனின் பெருந்தன்மையான அணுகுமுறை மற்றும் அரசியல் முதிர்ச்சிக்கு டான்ஸ்ரீ தனேந்திரன் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
தேசிய முன்னணியில் புதிதாக ஒரு கட்சியை சேர்த்துகொள்வதென்றால், அனைத்து உறுப்புக் கட்சிகளும் ஒருமனதாக சம்மதம் தெரிவிக்க வேண்டுமென்பது கூட்டணி அமைப்பு விதியாகும்.
ஒரு கட்சி எதிர்த்தால் கூட, புதியக் கட்சியை இணைத்துக் கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.



