
தெலுக் இந்தான், ஏப்ரல்-27-தெலுக் இந்தானில் கல்வித் துறையை ஊக்குவிக்கும் வகையில், வீடமைப்பு – ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங், SPM தேர்வில் சிறந்து விளங்கிய மாணவர்களை கௌரவிக்க கால் மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான நிதியுதவியை வழங்கியுள்ளார்.
தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினருமான கோர் மிங், இன்று SMJK San Min-னில் நடைபெற்ற மடானி நிதியுதவி வழங்கும் விழாவுக்குத் தலைமை தாங்கினார்.
இத்தொகுதியில், 256 சிறந்த மாணவர்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கும் மொத்தம் 251,000 ரிங்கிட் விநியோகிக்கப்பட்டது.
11A எடுத்தவர்களுக்கு 3,000 ரிங்கிட் முதல், குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டிய மாணவர்களுக்கான 500 ரிங்கிட் ஊக்கத்தொகை வரை இந்த நிதியுதவியில் அடங்கும்.
மாணவர்கள் உயர் கல்வியைத் தொடரும்போது, இந்த நிதியுதவி குடும்பங்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் என்று நம்புவதாக அமைச்சர் கூறினார்.
மேலும் இளைஞர்களின் வளர்ச்சிக்கு அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
தெலுக் இந்தான் DAP சேவை மையம் தொடர்ந்து நான்காவது ஆண்டாக இந்த நிதியுதவியை நடத்துகிறது.
பேரா மாநில ஆட்சிக் குழு உறுப்பினல் வூ கா லியோங்கும் இதில் கலந்துகொண்டார்.



