
கோலாலம்பூர்: நெகிரி செம்பிலான் மாநில அரசு தற்போதைக்கு மாற்றமின்றி தொடர வேண்டும்; அதாவது மந்திரி பெசார் Aminuddin Harun தனது பொறுப்பில் நீடிக்க வேண்டும் என மாநில யாங் டி பெர்த்துவான் பெசார் (Yang Di Pertuan Besar) Tuanku Muhriz Tuanku Munawir அரசாணை வழங்கியுள்ளதாக பிரதமர் Anwar Ibrahim தெரிவித்துள்ளார்.
மேலும், மாநில சட்டமன்றத்தை அவசரமாக கலைக்கும் கேள்வி தற்போது எழவில்லை என்றும் பிரதமர் தெளிவுபடுத்தினார். அரசியல் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தும் அவசர முடிவுகள் மக்களை பாதிக்கும் என்பதால், அனைத்து மாநில சட்டமன்ற உறுப்பினர்களும் அரசாணையை மதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மாநில அரசில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைப் பற்றி துவாங்கு முவ்ரிஸ் அவர்களுடன் ஏப்ரல் 27 இரவு நடைபெற்ற சந்திப்பில், விவாதித்ததாக அன்வார் தெரிவித்தார்.
14 உம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவை வாபஸ் பெற்றதையடுத்து அங்கு அரசியல் பரபரப்பு உருவானது.
“மக்களின் நலனையும் மாநிலத்தின் நலனையும் கருதி, தற்போதைக்கு Aminuddin Harun மந்திரி பெசார் பதவியில் தொடர வேண்டும் என்பது மன்னரின் விருப்பம். சட்ட தொடர்பான விவகாரங்கள் தீரும் வரை அவர் தனது கடமைகளை தொடர்ந்து மேற்கொள்வார்,” என்று அன்வார் கூறினார்.
14 பாரிசான் நேஷனல் மற்றும் 5 பெரிகாத்தான் நேஷனல் உறுப்பினர்கள் இணைந்து ‘எளிய பெரும்பான்மை’ ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுவது தற்போதைக்கு பொருந்தாது என்றும் அன்வார் குறிப்பிட்டார்.
நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண எந்த காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும், அனைத்து தரப்புகளுக்கும் உரிய அவககாசம் வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஏப்ரல் 27ஆம் தேதி, 14 உம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில மந்திரி பெசார் தலைமையில் நம்பிக்கை இழந்ததாகக் கூறி ஆதரவை திரும்பப் பெற்றனர். இதனால், நெகிரி செம்பிலான் அரசியல் சூழல் நிச்சயமற்ற நெருக்கடிக்கு தள்ளப்பட்டது.



