
கோலாலாம்பூர், ஏப்ரல்-30 – மலேசியாவில் நிலவி வரும் கடுமையான வெளிநாட்டுத் தொழிலாளர் பற்றாக்குறைக் காரணமாக, அடுத்த 3 மாதங்களில் 100 முதல் 200 இந்திய உணவகங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கம் PRIMAS எச்சரித்துள்ளது.
இது தொடர்பாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு அவசரக் கோரிக்கை விடுத்துள்ள சங்கத்தின் தலைவர் டத்தோ கோவிந்தசாமி, பல்வேறு அமைச்சுகளிடம் முறையிட்டும் இதுவரை முறையான தீர்வு கிடைக்கவில்லை என ஆதங்கம் தெரிவித்தார்.
இந்த நெருக்கடி தொடர்ந்தால், மலேசியாவின் பொருளாதாரத்திற்கும் கலாச்சாரத்திற்கும் பெரும் பங்காற்றி வரும் இந்த உணவகங்கள் நிரந்தரமாக மூடப்படும் சூழல் உருவாகும்.
இதனால் பல மலேசியர்கள் வேலைவாய்ப்பை இழப்பார்கள் என, இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, இந்திய வணிகர்களின் உண்மையான பிரச்னைகளைப் புரிந்துகொண்டு செயல்பட ஓர் இந்திய அமைச்சரிடம் பொறுப்பு கொடுக்கப்பட வேண்டும்.
பிரதமர் இதில் நேரடியாகத் தலையிட்டுத் தீர்வு காண்பார் என பிரிமாஸ் சார்பில் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.



