
கோலாலம்பூர், மே-13-வரலாறு என்பது வெறும் தேதிகளும் பெயர்களும் மட்டுமல்ல, அது ஒரு நாட்டின் அடையாளம் மற்றும் DNA ஆகும்.
தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங் தலைமையின் கீழ், நாட்டின் வரலாற்றைப் பாதுகாக்கும் முயற்சி இப்போது ஒரு தேசிய இலக்காக மாற்றப்பட்டுள்ளது.
இளைஞர்களிடையே அதிகரித்து வரும் ‘வரலாற்று மறதி’யைத் தடுக்க, தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு மற்றும் மலேசிய தேசிய ஆவணக்காப்பகம் இணைந்து 2026-ஆம் ஆண்டு தேசிய வரலாற்று மாநாட்டை (KSN) நடத்துகின்றன.
_”ஒன்றிணைந்து தேசத்தைக் கட்டியெழுப்புவோம்”_ என்ற கருப்பொருளில், இந்த மாநாடு மே 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெர்லிஸில் நடைபெறுகிறது.
உலகமயமாக்கல் சூழலில், தவறான தகவல்களைத் தரம் பிரிக்கவும், விமர்சன ரீதியான சிந்தனையை வளர்க்கவும் வரலாறு ஒரு முக்கிய கருவியாக அமையும் என்று அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக, Gen Z தலைமுறையினர் நாட்டின் உண்மையான அடையாளத்தைப் புரிந்துகொள்ள இந்த மாநாடு ஒரு பாலமாக இருக்கும்.
இதற்கு முந்தைய மாநாடுகளின் வாயிலாக, தேசிய வரலாற்றாசிரியர்கள் மன்றம் உருவாக்கப்பட்டதோடு, வெளிநாடுகளில் உள்ள வரலாற்று ஆவணங்களை மீட்டெடுக்கும் முயற்சிகளும் வெற்றி கண்டுள்ளன.
அதன் தொடர்ச்சியாக, இம்முறை மன்னராட்சி முறை தொடங்கி தேசியவாத இயக்கம், நிர்வாக நடைமுறை மற்றும் மடானி சமூகத்தின் நல்வாழ்வு வரை விரிவாக விவாதிக்கப்படுகிறது.
இது வெறும் கடந்த காலம் பற்றியது அல்ல, மலேசியாவின் எதிர்காலத்திற்கான அடித்தளம் என டத்தோ ஏரன் சொன்னார்.



