
ஜோர்ஜ்டவுன், மே-13-அட்லாண்டிக் பெருங்கடலில் பயணித்த சொகுசுக் கப்பலில் Hantavirus தொற்றால் 3 பயணிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பினாங்கு Swettenham கப்பல் முனையத்தில் (Swettenham Pier) பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அனைத்துலகக் கப்பல்கள் மூலம் இந்தத் தொற்று பரவுவதைத் தடுக்கும் நோக்கில், முனையத்திற்கு வரும் அனைத்துப் பயணிகளுக்கும் உடல் வெப்பப் பரிசோதனை மற்றும் மருத்துவக் கண்காணிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, சோர்வு, காய்ச்சல் மற்றும் தசை வலி போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப் பினாங்கு சுகாதாரத் துறை ஏற்பாடு செய்துள்ளது.
MV Hondius கப்பலில் ஏற்பட்ட இந்தத் தொற்று பாதிப்பு குறித்து உலக சுகாதார நிறுவனம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பினாங்கு துறைமுக அதிகாரிகள் கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்பட்டு வருகின்றனர்.
இது ஒரு தற்காப்பு நடவடிக்கையே என்றும், பொது மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுற்றுப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ள சூழலில், அனைத்துலகத் தரத்திலான சுகாதாரப் பரிசோதனைகள் மூலம் மாநிலத்தின் பாதுகாப்பை உறுதிச் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.



