
கோலாலாம்பூர், மே-14 – ம.இ.கா, தனது 80-ஆவது ஆண்டு விழாவுக்கான சின்னத்தை வெளியிட்டுள்ளது.
இன்று மாலை கோலாலம்பூர் ம.இ.கா தலைமையகத்திலுள்ள நேதாஜி மண்டபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கட்சியின் தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் இதனை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து வைத்தார்.
இந்தச் சின்னத்தை ம.இ.கா கூட்டரசுப் பிரதேச மகளிர் பிரிவுத் தலைவி ஜெயந்தி ராமன் நாயர் வடிவமைத்துள்ளார்.
கட்சியின் 80 ஆண்டுகாலப் பாரம்பரியத்தையும், வருங்காலத் தொலைநோக்குப் பார்வையையும் பிரதிபலிக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
அவரது பங்களிப்பைப் பாராட்டும் வகையில் விக்னேஸ்வரன் அவருக்குச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விக்னேஸ்வரன், இந்த 80-ஆம் ஆண்டு விழாவை ஒட்டி வரும் மே 21 முதல் ஜூலை 26 வரை நாடு தழுவிய அளவில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.
இவ்வேளையில், ம.இ.கா.வைப் பற்றி நிலவி வந்த எதிர்மறையான கருத்துகள் தற்போது மாறியுள்ளன.
எனவே, மக்கள் ம.இ.கா-வை ஒரு பொக்கிஷமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் ஆதாரமற்ற புகார்களுக்குச் சாட்சியங்கள் இல்லாததால் அவை நிலைப்பதில்லை என்று குறிப்பிட்ட அவர், ம.இ.கா தற்போது ஆக்கப்பூர்வமான மாற்றங்களுடன் வெற்றிப் பாதையில் பயணிப்பதாகக் கூறினார்.
இந்நிகழ்வில் தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.



