Latestமலேசியா

அலோர் ஸ்டாரில் பெண் கத்தியால் குத்தப்பட்ட கொடூரம்: சந்தேக நபர் 7 நாட்கள் தடுத்து வைப்பு

அலோர் ஸ்டார், மே-18-கெடா, அலோர் ஸ்டாரில் பெண் ஒருவர் கொடூரமான முறையில் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக 32 வயது சொத்துடைமை முகவர் ஒருவர் 7 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

ஆபத்தான ஆயுதத்தால் கடுமையான காயம் விளைவித்த குற்றத்திற்காக, குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணையை மேற்கொள்வதற்காக, அலோர் ஸ்டார் மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் இந்த 7 நாள் தடுப்புக் காவல் உத்தரவை பிறப்பித்தது.

அலோர் ஸ்டார், Kepala Batas, Jalan Titi Gajah-வில் உள்ள உணவகம் ஒன்றின் முன்பாக இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட 35 வயது பெண், நில அலுவலகத்தில் தட்டச்சராகப் பணிபுரிபவர் என்றும், அவருக்கும் சந்தேக நபரான அந்த ஆணுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பிறகு, காரில் இருந்த பெண்ணின் கழுத்துப் பகுதியில் சந்தேக நபர் கத்தியால் குத்தியுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பலத்த காயமடைந்த அந்தப் பெண் உடனடியாக சுல்தானா பாஹியா மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார்.

தாக்குதலுக்குப் பிறகு தப்பியோடிய சந்தேக நபரை, போலீஸார் தீவிரமாகத் தேடி, சம்பவம் நடந்த அடுத்த 5 மணி நேரத்திற்குள் தாமான் ஊடாவில் உள்ள ஒரு மசூதியில் அதிகாலை 1:50 மணியளவில் கைதுச் செய்தனர்.

தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை போலீஸார் தற்போது தேடி வருகின்றனர்.

இந்தச் சம்பவத்திற்கான பின்னணி மற்றும் நோக்கம் குறித்து விசாரணை நடந்து வருவதால், பொது மக்கள் இது குறித்து எவ்வித வதந்திகளையும் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!