எல் நினோ வெப்பத்தால் அல்போன்சா மாம்பழ விளைச்சல் 90% அழிவு; கடுமையான நஷ்டத்தில் இந்தியாவின் மாம்பழத் தொழில்

புது டெல்லி, மே-27,
இந்தியாவின் மிக உயர்தர மாம்பழ இரகமான ‘அல்போன்சா’ (Alphonso) தற்போது கடுமையான பருவநிலை மாற்றத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், இந்தியாவின் 2.3 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ₹19,000 கோடி) மதிப்புள்ள மாம்பழத் தொழில் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் அல்போன்சா விளையும் முக்கியப் பகுதியான தேவ்காட்டில் (Devgad) சுமார் 85% முதல் 90% வரை பயிர்கள் நாசமாகியுள்ளதாக அரசாங்கக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நிலவிய அசாதாரண வெப்பநிலை மாற்றங்களும், அதைத் தொடர்ந்து ஏப்ரல், மே மாதங்களில் ‘எல் நினோ’ (El Nino) விளைவால் ஏற்பட்ட அதீத வெப்பமுமே இந்த வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகும்.
இதுமட்டுமின்றி, ஈரான் போர்ச் சூழல் காரணமாக அனைத்துலகக் கப்பல் போக்குவரத்துக்கான வாடகை 2 மடங்காக உயர்ந்துள்ளது.
இதனால் துபாய், ஓமான் போன்ற வளைகுடா நாடுகளுக்கான ஏற்றுமதியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதி செய்ய வேண்டிய பழங்கள் உள்நாட்டுச் சந்தையிலேயே விற்கப்படுவதால், கடுமையான தட்டுப்பாடு இருந்தபோதிலும் உள்ளூர் சந்தையில் மாம்பழங்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
இது விவசாயிகளுக்கும், பேக்கிங் தொழில் போன்ற வாழ்வாதார ஆதாரங்களைக் கொண்டவர்களுக்கும் பெரும் பொருளாதாரப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது…



