
கோலாலாம்பூர், மே-30-தியாகப் பெருநாள் பலியிடலின் போது பெர்லிஸ் மந்திரி பெசார் மாட்டைத் துப்பாக்கியால் சுட்ட சம்பவத்திற்கு, மலேசிய இந்து சங்கம் தனது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளதோடு, இது இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மலேசியாவில் உள்ள அனைத்து மதச் சுதந்திரத்தையும் மதிப்பதாகக் குறிப்பிட்டுள்ள இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் ஸ்ரீ காசி சங்கபூஷன் தங்க கணேசன், ஒரு விலங்கைச் சுடத் துப்பாக்கியைப் பயன்படுத்துவது எந்தவொரு வழிபாட்டின் அங்கமும் அல்ல என்றார்.
மிரண்டு ஓடும் விலங்குகளைக் கையாளக் கால்நடைத் துறையிடம் முறையான வழிமுறைகள் உள்ள போது, மந்திரி பெசார் பொதுவெளியில் துப்பாக்கியைப் பயன்படுத்தியது சமூகத்திற்குத் தவறான முன்மாதிரியாகும் என்றும் அவர் சாடினார்.
இந்து மதத்தில் மாடு புனிதமானதாகக் கருதப்படுவதால், இச்செயல் இந்துக்களின் உணர்வுகளைப் பெரிதும் பாதித்துள்ளது.
எனவே, இச்சம்பவத்தில் நாட்டின் துப்பாக்கிச் சட்டங்கள் முறையாகப் பின்பற்றப்பட்டனவா என்பது குறித்து போலீஸார் வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என மலேசிய இந்து சங்கம் சார்பில் தங்க கணேசன் அவசரக் கோரிக்கை விடுத்தார்.
பொது மக்களின் பாதுகாப்புக்காகவே மாட்டின் காலில் தான் சுட்டதாக மந்திரி பெசார் அபு பக்கார் ஹம்சா ஏற்கனவே விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



