
பாகான் டத்தோ, ஜூன்-1 – மக்களுக்குச் சேவை செய்வதன் மூலமே ஓர் அரசியல் இயக்கத்தின் உண்மையான மதிப்பு வெளிப்படுகிறது என்று துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடியின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி தெரிவித்துள்ளார்.
சாஹிட்டின் நாடாளுமன்றத் தொகுதியான பேராக், பாகான் டத்தோ சன்மார்க்க மண்டபத்தில் நடைபெற்ற ம.இ.கா குடும்ப தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், தேசிய முன்னணி ஆட்சிக் காலத்தில் இந்திய மாணவர்களுக்கான மெட்ரிகுலேஷன் மற்றும் பொதுப் பல்கலைக்கழக சேர்க்கை வாய்ப்புகள் விரிவுபடுத்தப்பட்டதைச் சுட்டிக்காட்டினார்.
இவை வெறும் வாக்குறுதிகள் அல்ல, நடைமுறையில் சாத்தியமாக்கப்பட்ட திட்டங்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சுமார் 1,500-க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வு, ம.இ.கா மீது மக்கள் கொண்டுள்ள மாறாத நம்பிக்கையையும் ஆதரவையும் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், தேசிய முன்னணி தலைமையுடன் தனிப்பட்ட விமர்சனங்களில் ஈடுபடாமல், முதிர்ச்சியான முறையில் கட்சியை வழிநடத்தி வரும் ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரனின் தலைமைத்துவத்தையும் அர்விந்த் அப்பளசாமி வெகுவாகப் பாராட்டினார்.
குடும்பங்களை ஒன்றிணைக்கும் நோக்கில் நடைபெற்ற இந்நிகழ்வில், பொது மக்களுக்காகப் பல்வேறு விறுவிறுப்பான போட்டி நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.



