
மேகாலயா, ஜூன்-2-வடகிழக்கு இந்திய மாநிலமான மேகாலயாவின் உம்ரோய் இராணுவ முகாமில் நடைபெற்ற ‘பிரகதி 2026’ (PRAGATI 2026) பன்னாட்டு கூட்டு இராணுவப் பயிற்சி, 72 மணி நேர இறுதிச் சோதனையுடன் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இந்தியப் பெருங்கடலில் உள்ள வட்டார இராணுவங்களின் வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்கான கூட்டு ஒத்துழைப்பை மையமாகக் கொண்டு இந்த பயிற்சி நடத்தப்பட்டது.
இதில் இந்தியா, மலேசியா, பூட்டான், கம்போடியா, பிலிப்பின்ஸ் உள்ளிட்ட 13 நட்பு நாடுகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பங்கேற்றனர்.
இராணுவத் துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சி, காடுகள் மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை கையாள்வதில் கவனம் செலுத்தியது.
இதில் பாறை ஏறுதல், காடுகளுக்குள் சுடுதல், வெடிகுண்டுகளைக் கண்டறிதல் போன்ற சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக, ‘தற்சார்பு இந்தியா’ திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன பாதுகாப்பு உபகரணங்களின் கண்காட்சியும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் நடத்தப்பட்டது.



