
ஜோகூர் பாரு, ஜூன்-2- குளுவாங், ஜாலான் ரெங்காம்–சிம்பாங் ரெங்காம், சாலையில் 27 ஆவது கிலோமீட்டரில் ஐவர் உயிரிழந்த ஐந்து வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்து குறித்த விசாரணைகளுக்கு உதவுவதற்காக, மெர்சடிஸ் பென்ஸ் கார் ஓட்டுநரான 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டான்.
அந்த இளைஞன் தனது 22 வயது சகோதரர் ஓட்டிவந்த BMW 530e காருடன், மெர்சிடிஸ்-பென்ஸ் A250 காரை அதிவேகமாகவும் பொறுப்பற்ற முறையிலும் ஓட்டிச் சென்றதாக நம்பப்படுகிறது என குளுவாங் போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் பஹ்ரின் முகமட் நோ (Bahrin Mohd Noh) தெரிவித்தார்.
நேற்று பிற்பகல் மணி 1.15 க்கு நடந்த துயரச் சம்பவத்தில், BMW 530e கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசைப் பாதைக்குத் திரும்பி, பெரோடுவா அல்சா, டொயோட்டா வியோஸ், புரோட்டான் வீரா மற்றும் மற்றொரு மெர்சிடிஸ்-பென்ஸ் கார் மீது மோதியது.
பின்னர் அந்த BMW கார் ஒரு பள்ளத்தில் கவிழ்ந்ததில், அதன் ஓட்டுநர் உயிரிழந்தார்.
டொயோட்டா வியோஸ் காரின் ஓட்டுநர், 36 வயது ஆடவர், அவரது 33 வயது மனைவி, 73 வயது மூதாட்டி மற்றும் 10 வயது சிறுமி என மேலும் நான்கு பேரும் உயிரிழந்தனர்.
தலை மற்றும் உடலில் ஏற்பட்ட கடுமையான காயங்கள் காரணமாக வியோஸ் காரின் ஓட்டுநரும் பயணியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், அதேசமயம் BMW ஓட்டுநர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தார் என பஹ்ரின் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த விபத்தில் பெரோடுவா அல்சா காரில் இருந்த 11 மற்றும் 7 வயதுடைய இரண்டு சிறார்கள் உட்பட ஐவர் காயம் அடைந்தனர்.
இரண்டு சிறார்களும் குளுவாங் ஹஜ்ஜா கல்சோம் மருத்துவமனையின் சிவப்பு மண்டலத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மெர்சிடிஸ்-பென்ஸ் A250 கார் பறிமுதல் செய்யப்பட்டதோடு 1987 ஆம் ஆண்டின் சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1) மற்றும் பிரிவு 42(1)-ன் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பஹ்ரின் தெரிவித்தார்.



