
தெலுக் இந்தான், ஜூன்-5,
பேராக், தெலுக் இந்தானில் உள்ள உணவகம் ஒன்றில் பூனை ஒன்று கொடூரமான முறையில் வதைக்கப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, போலீஸ் இதுகுறித்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.
Taman Melor-ரில் உள்ள உணவகம் ஒன்றில், நபர் ஒருவர் பூனையை கட்டாயப்படுத்தி சாக்குப்பைக்குள் அடைக்கும் ஒரு நிமிடம் 32 வினாடிகள் கொண்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
தொடக்கக் கட்ட விசாரணையில், அந்த உணவகத்தின் உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில், பூனையை சாக்கில் அடைத்த நபர் அதே உணவகத்தில் பணிபுரியும் ஒரு ஊழியர் என்பது தெரியவந்துள்ளது.
தற்போது இச்சம்பவம், 2015 விலங்குகள் நலச் சட்டத்தின் கீழ், விலங்கு வதைத் தடுப்புக் குற்றமாகப் பதிவுச் செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.
மேலும், கால்நடை மருத்துவச் சேவைத் துறை மற்றும் பிற துறைகளுடன் முகமைகளுடன் இணைந்து போலீஸ் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் விலங்கு நலனில் அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்றும், இது போன்ற விலங்கு வதை சம்பவங்களைக் கண்டால் உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் போலீஸ் அறிவுறுத்தியுள்ளது.



