Latestமலேசியா

வரலாற்று ஆவணங்களைப் பாதுகாப்பது கூட்டுப் பொறுப்பு; ஒருமைப்பாட்டு அமைச்சர் ஏரன் அகோ வலியுறுத்தல்

ஈப்போ, ஜூன்-9-தேசிய வரலாற்று ஆவணங்களைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, அது ஒட்டுமொத்த பொது மக்களின் கூட்டுப் பொறுப்பாகும் என, தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங் தெரிவித்துள்ளார்.

​ஈப்போவில் நடைபெற்ற 30-ஆவது தென்கிழக்காசியா மற்றும் பசிஃபிக் ஒலி-ஒளி ஆவணக்காப்பக சங்கத்தின் (SEAPAVAA) மாநாட்டைத் தொடக்கி வைத்துப் பேசியபோது அவர் இதனைத் குறிப்பிட்டார்.

ஒலி-ஒளி ஆவணக்காப்பகத்தை வலுப்படுத்துவதற்கான 4 முக்கிய வியூகங்களையும் அவர் பட்டியலிட்டார்.

அவை முறையே, டிஜிட்டல் மயமாக்கலை விரைவுபடுத்துதல், பொறுப்பான முறையில் AI பயன்பாடு, பொது மக்களின் பங்களிப்பை அதிகரித்தல், வட்டார மற்றும் அனைத்துலக ஒத்துழைப்பு மேம்படுத்துதல் ஆகும்.

இவ்வேளையில், ​மலேசிய தேசிய ஆவணக்காப்பகம் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் பொது மக்களிடமிருந்து சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான வரலாற்று ஆவணங்களையும், பழங்காலப் பொருட்களையும் சேகரித்துள்ளதாக அவர் கூறினார்.

குடும்பப் புகைப்படங்கள், கிராமிய ஆவணங்கள், பழைய ஆடியோ கேசட்டுகள் மற்றும் உள்ளூர் சங்கங்களின் பதிவுகள் அவற்றிலடங்கும்.

​மேலும், இக்காலக்கட்டத்திற்கு ஏற்ப ஆவணக்காப்பகப் பணிகளில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் அவசியத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார்.

குறிப்பாக, சேதமடைந்த பழைய ஆவணங்களைச் சீரமைக்கவும், முகங்கள் மற்றும் இடங்களை விரைவாகக் கண்டறியவும் இந்த அதி நவீனத் தொழில்நுட்பம் பெரிதும் உதவும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

​பொது மக்கள் தங்களின் பழைய வரலாற்று ஆவணங்களை ஆவணக்காப்பக இணையத்தளம் மூலமாகச் சமர்ப்பித்து, நாட்டின் வரலாற்றை எதிர்கால சந்ததியினருக்குக் கொண்டு சேர்க்க ஒத்துழைக்க வேண்டும் என்றும் டத்தோ ஏரன் கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!