
கோலாலம்பூர், ஜூன்-9-ஒற்றுமை அரசாங்கம் அமைக்கப்பட்டதற்கு பாரிசான் நேஷனல் (BN) நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான் காரணம் என்ற டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடியின் கருத்துக்கு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அரசியல் உதவியாளர் காமில் முனிம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாரிசான் நேஷனல் கட்சியின் 30 நாடாளுமன்ற இடங்கள் இல்லையென்றால் பக்காத்தான் ஹராப்பானால் ஆட்சி அமைத்திருக்க முடியாது என்றும், நாட்டின் நிலைத்தன்மைக்கு தங்களின் பங்களிப்பை புறக்கணிக்க முடியாது என்றும் துணைப் பிரதமர் சாஹிட் நேற்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுத்துள்ள காமில் முனிம், தற்போதைய ஒற்றுமை அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட குழுவினால் மட்டும் உருவாக்கப்படவில்லை என்றும், பல கட்சிகளின் கூட்டு முயற்சியால் தான் இது சாத்தியமானது என்றும் தனது முகநூல் பதிவில் கூறியுள்ளார்.
எனவே, இந்த விஷயத்தில் யாரும் தற்பெருமை பேசத் தேவையில்லை என்றும், பக்காத்தான் ஹராப்பானில் அதிக இடங்களை வென்ற கட்சியான DAP கூட, நாட்டின் இரட்சகன் அதாவது காப்பாற்ற வந்தவன் போல் நடந்துகொள்வதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தவிர, நாட்டின் நிலைத்தன்மை என்பது பரஸ்பர மரியாதையிலிருந்து வருகிறதே தவிர, தலைக்கனமான அணுகுமுறையால் அல்ல என்றும் காமில் முனிம் சாடியுள்ளார்.
ஜோகூர், நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், ஒற்றுமை அரசாங்கத்தின் இரு முக்கியக் கூட்டணிகளான பக்காத்தானும் பாரிசானும் இப்படி வெளிப்படையாகவே உரசிக் கொள்வது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



