Latestமலேசியா

பண்டார் செகாமாட் தமிழ்ப் பள்ளியின் 43 ஆண்டுகால நிலப்பிரச்னைக்கு விடிவுகாலம்

செகாமாட், ஜூன்-14 – ஜோகூர், செகாமாட் மாவட்ட மற்றும் தேசிய அளவிலான ஹாக்கி போட்டிகளில் பல சாதனைகளைப் படைத்த பண்டார் செகாமாட் தமிழ்ப்பள்ளியின் 43 ஆண்டுகால நிலப்பிரச்னைக்கு ஒருவழியாக விடிவுகாலம் பிறந்துள்ளது.

கடந்த 1983-ஆம் ஆண்டு முதல் நீடித்து வந்த இப்பள்ளியின் விளையாட்டு மைதான நில எல்லைப் பிரச்னையை ஆய்வு செய்ய, சிலாங்கூர் செக்கிஜாங் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான டத்தோ ஸ்ரீ Dr சாலிஹா முஸ்தஃபா அண்மையில் இப்பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

மாநிலக் கல்வி இலாகா மற்றும் நில அலுவலக வரைபடங்களில் இருந்த முரண்பாடுகளே இப்பிரச்னை 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்ததற்குக் காரணம் என கண்டறியப்பட்டது.

இதனையடுத்து திரட்டப்பட்ட முழுமையான கோப்புகள் கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக்கிடம் உடனடியாக ஒப்படைக்கப்பட்டன.

தொடர்ந்து, தனது நெருக்கடியான பணி அட்டவணைக்கு மத்தியிலும் செகாமாட் தமிழ்ப்பள்ளிக்கு நேரில் வருகை தந்த கல்வி அமைச்சர், விளையாட்டு மைதானத்திற்கான ஆரம்பகட்ட நிலப் பயன்பாட்டு அனுமதிக் கடிதத்தை பள்ளி நிர்வாகத்திடம் அதிகாரப்பூர்வமாக வழங்கினார்.

இது வெறும் நிலத்தைப் பற்றியது மட்டுமல்ல, நமது பிள்ளைகளின் விளையாட்டுத் திறனையும் எதிர்காலத்தையும் வளர்ப்பதற்கான மடானி அரசாங்கத்தின் உறுதியான அர்ப்பணிப்பு என Dr சாலிஹா முஸ்தஃபா தெரிவித்துள்ளார்.

இந்த முக்கிய முன்னேற்றத்தை நனவாக்க உதவியக் கல்வி அமைச்சு, ஜோகூர் மாநிலக் கல்வி இலாகா, செகாமாட் மாவட்டக் கல்வி அலுவலகம், பள்ளி நிர்வாகம், பெற்றோர்-ஆசிரியர் சங்கம், சமூகத் தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் சாலிஹா தனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!