Latestமலேசியா

ஜூலை 5 விமரிசையாக நடைபெறும் டெங்கில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகப் பெருவிழா

டெங்கில், ஜூன்-14 – சிலாங்கூர், டெங்கிலில் உள்ள இந்து சமூகத்தினருக்கு ஒரு முக்கிய ஆன்மீக வரலாற்று நிகழ்வாக, ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

தாமான் பெர்மாத்தாவில் பழைமையும் பெருமையும் வாய்ந்த ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் இந்த கும்பாபிஷேகம் வரும் ஜூலை 5-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெறவிருக்கின்றது.

புத்ராஜெயா, சைபர்ஜெயா மேம்பாட்டுத் திட்டங்களினால் பாதிக்கப்பட்டு 1994-ஆம் ஆண்டு டெங்கில் பட்டணத்திற்கு மாற்றப்பட்ட இவ்வாலய திருப்பணிகளுடன், அம்பிகையின் உத்தரவுப்படி ஸ்ரீ மரகதாம்பிகா சமேத மஹா காலேஸ்வரர் நூதன சிவாலயமும் தற்பொழுது அழகுற அமைக்கப்பட்டுள்ளது.

ஆலயத்தின் சிறப்புகள் குறித்து வணக்கம் மலேசியாவிடம் மேலும் விவரிக்கிறார் கும்பாபிஷேக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் செனட்டருமான டத்தோ ரவிசந்திரன் நாரயணன்.

மகா மாரியம்மன் ஆலயத்தோடு சேர்த்து, இங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள சிவனாலயத்திற்கும் கும்பாபிஷேகம் நடைபெறுவதாக அவர் சொன்னார்.

இப்பெருவிழா ம.இ.கா. தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன், துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ எம். சரவணன், தேசிய நில நிதி கூட்டுறவு சங்க நிர்வாக இயக்குனர் டத்தோ பி. சகாதேவன் ஆகியோரின் முன்னிலையிலும் தலைமையிலும் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறவிருக்கும் நிலையில், அதிலும் கலந்துகொள்ளுமாறு ரவிசந்திரன் கேட்டுக் கொண்டார்.

மலேசியா மற்றும் இந்தியாவின் முன்னணி குருமார்களின் தலைமையில், ஜூலை 5 காலை மணி 10.10-லிருந்து 10.50க்குள்ளான சுபவேளையில் இந்த மஹா கும்பாபிஷேகம் நடத்தப்படும்.

எனவே, சுற்று வட்டாரத்தில் தோட்டங்களைச் சேர்ந்தோர் உட்பட பக்தர்கள் அனைவரும் இப்பெருவிழாவில் கலந்துகொண்டு இறையருள் பெறுமாறு டத்தோ ரவிசந்திரன் ஆலயம் சார்பில் அன்புடன் அழைக்கின்றார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!