
மிரி , ஜூன்-18- மீரியில் தஞ்சோங் லோபாங் (Tanjung Lobang) பகுதியில் ஆடம்பர பங்களாவில் நேற்று மதியம் சுமார் 12 மணியளவில் நடத்தப்பட்ட சோதனையில், மானியம் உதவித் தொகை கொண்டதாக கருதப்படும் 15,000 லிட்டர் டீசல் மற்றும் 16,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்கர் வாகனம், எஸ்.யு.வி வாகனம் உள்ளிட்ட 131,079 ரிங்கிட் மதிப்புள்ள உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சரவா மாநில போலீஸ் தலைமையகம் மற்றும் மிரி மாவட்ட போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் போலீஸ்காரர்கள் அடங்கிய குழுவினர் இந்தச் சோதனையை மேற்கொண்டனர்.
மானியம் வழங்கப்பட்ட டீசலை முறைகேடாகக் கையாண்டதாகச் சந்தேகிக்கப்படும் 42 முதல் 52 வயதுக்குட்பட்ட நான்கு உள்ளூர் ஆடவர்கள் இந்தச் சோதனையின்போது கைது செய்யப்பட்டதாக மிரி மாவட்ட போலீஸ் தலைவர் உதவிக் கமிஷனர் முகமட் பர்ஹான் லீ அப்துல்லா தெரிவித்தார்.
சந்தேக நபர் அப்பகுதியில் பங்களா வீட்டை வாடகைக்கு எடுத்து, வீட்டை ஒட்டியிருந்த அறையை சட்டவிரோதமாக டீசலைச் சேகரிக்கும் இடமாகப் பயன்படுத்தியிருப்பது சோதனையில் தெரியவந்தது.
மிரி (Miri) நகரத்தைச் சுற்றியுள்ள பெட்ரோல் நிலையங்களில், மானிய விலையிலான டீசலைத் தனியார் வாகனங்களின் எரிபொருள் தொட்டிகள் மற்றும் ‘ஜெர்ரி கேன்கள்’ (jerry cans) மூலம் வாங்குவதற்கு ஒரு கும்பல் தரகர்களை பயன்படுத்தியதும், பின்னர் அதனை வளாகத்தில் உள்ள தொட்டிகளுக்கு மாற்றி, அக்கும்பலிடம் ஒப்புக்கொள்ளப்பட்ட விலைக்கு விற்றதும் தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.



