
ஜோர்ஜ்டவுன், ஜூன் -19-பிறப்பிலிருந்து இறப்பு வரை மக்களுக்கு எல்லா சலுகைகளையும் செய்துகொடுக்க வேண்டுமென்பதே பினாங்கு மாநில அரசின் நோக்கமாகும்.
வெறும் பேச்சோடு நிற்காமல் அதனை செயலிலும் அது காட்டி வருகிறது.
அந்த வகையில், சுங்கை ஆரா பகுதி வாழ் இந்தியர்களின் தேவையறிந்து, அங்கு இறுதிச் சடங்குகளுக்கான பிரத்தேய இடத்தை சாத்தியமாக்கியுள்ளார், ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ எஸ். சுந்தராஜூ…
சுங்கை ஆரா, பார்லர் ஈமச் சடங்கு நிலையம் குறித்து வணக்கம் மலேசியாவிடம் விவரித்தார் சுந்தராஜூ..
முன்னதாக, சுற்று வட்டா இந்தியர்கள், இறுதி காரியங்களை முறையாக நடத்த இடமில்லாமல் அவதிப்பட்ட விஷயம், சுங்கை ஆரா சுப்ரமணியர் ஆலயத் தலைவர் ஆறுமுகம் மூலமாக சுந்தராஜுவின் காதுகளுக்கு எட்டியது.
இதையடுத்து ஒரே ஆண்டில் அனைத்தும் சமூகமாக நடைபெற்று, இன்று ஈமக் காரியங்களை நடத்துவதற்கு அவ்விடயம் தயாராக உள்ளது.
சுமார் 200,000 ரிங்கிட் செலவில், குளிக்கும் வசதி, தங்கும் வசதி உள்ளிட்டவற்றுடன் இந்த இடம் தயாராகியுள்ளதாக சுந்தராஜு தெரிவித்தார்.
ஆனால் மாநில அரசிடமிருந்து சில நடைமுறை அனுமதிகள் எஞ்சியிருப்பதால், இன்னும் திறக்கப்படவில்லை என்றார் அவர்.
இதனிடையே, பினாங்கில் இந்து கிரியைகள் செய்ய ஒரு வழி வகை காணப்பட்டுள்ளது; அதாவது 5 மாவட்டங்களில், ஒவ்வோர் மாவட்டத்திலும் ஓரிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக சுந்தராஜூ சொன்னார்.
இவ்வேளையில், இறுதி காரியங்களுக்கு இங்கிருந்து வெகு தூரம் போக வேண்டியிருந்த சுற்று வட்டார மக்களுக்கு இனி அந்த சிரமம் இல்லை என ஆலயத் தலைவர் ஆறுமுகம் கூறினார்.
ஈமக்காரியங்களுக்கான இப்புதிய இடத்தில் அடக்கம் மட்டும்தான், தகனம் செய்ய நினைப்பவர்கள் இறுதி காரியங்களை இங்கே செய்துவிட்டு வேரிடத்திற்கு கொண்டுச் செல்லலாம்.
மக்களின் வசதிக்காக பெயர்ப் பலகை செய்யப்பட்டுள்ள நிலையில், மிகக் குறைந்த விலையில் தான் சேவை வழங்கப்படுகிறது.
தேவைப்படுவோர் ஆலய நிர்வாகத்தைத் தொடர்பு கொள்ளலாம் என ஆறுமுகம் சொன்னார்.
இவ்விடம் உருவாகக் முக்கியக் காரணமாக இருந்த டத்தோ ஸ்ரீ சுந்தராஜுவுக்கும் ஆலயம் சார்பிலும் சுற்று வட்டார மக்கள் சார்பிலும் ஆறுமுகம் நன்றித் தெரிவித்தார்.



