Latestமலேசியா

தான் ஸ்ரீ தம்பிராஜாவின் முதலாமாண்டு நினைவு அஞ்சலி; SMC தலைமையகத்தில் சிறப்பு பிரார்த்தனை

பெட்டாலிங் ஜெயா, ஜூன்-23-ஸ்ரீ முருகன் மையத்தின் (SMC) நிறுவனருமான மறைந்த தான் ஸ்ரீ Dr M. தம்பிராஜாவின் முதலாமாண்டு நினைவு அஞ்சலி மற்றும் பிரார்த்தனை கூட்டம், இன்று காலை பெட்டாலிங் ஜெயாவிலுள்ள அதன் தலைமையகத்தில் நடைபெற்றது.

காலை 9 மணி முதல் நடைபெற்ற இந்த சிறப்புப் பிரார்த்தனையில், தான் ஸ்ரீ அவர்களின் துணைவியார் புவான் ஸ்ரீ இந்திராணி, மகள் Dr சுமித்ரா, மகன் ஆனந்த், SMC இயக்குனர் சுரேன் கந்தா, முக்கியப் பொறுப்பாளர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு தான் ஸ்ரீ தம்பிராஜாவின் இலட்சியங்களையும் சாதனைகளையும் நினைவு கூர்ந்தனர்.

இதனைத் தொடர்ந்து, SPM தேர்வில் 5 ஏ-க்களுக்கு மேல் பெற்று, மேற்படிப்புக்குச் செல்லும் B40 பிரிவு மாணவர்களுக்காக ‘தந்தை மனம்’ திட்டத்தின் கீழ் “பிரைட் பாத் பர்சரி” (Brightpath Bursary) என்னும் புதிய கல்வி நிதியுதவித் திட்டம் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக இன்று 7 சிறந்த மாணவர்களுக்கு தலா 1,000 முதல் 3,000 ரிங்கிட் வரையிலான நிதியுதவி வழங்கப்பட்டது.

இவ்வாண்டு 150,000 ரிங்கிட் திரட்ட இலக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில், இதன் மூலம் 50 முதல் 100 மாணவர்கள் வரை பயனடைவர் என SMC இயக்குனர் சுரேன் கந்தா தெரிவித்தார்.

Dr தம்பிராஜாவின் மறைவுக்குப் பிறகு, இந்த இயக்கம் தொடர்ந்து தொய்வின்றிச் செயல்படுமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் பரவலாக இருந்தது உண்மைதான், ஆனால் அவர் உருவாக்கி விட்டுச் சென்றுள்ள படை அந்த கண்ணோட்டத்தை உடைத்திருப்பதாக, சுரேன் நெகிழ்வுடன் கூறினார்.

இவ்வேளையில், வரும் ஜூலை 5-ஆம் தேதி, ஜோகூர், ஸ்கூடாய், புக்கிட் இண்டா மக்கள் மண்டபத்தில் சுமார் 2,000 பேரைத் திரட்டி ஒரு மாபெரும் கல்விப் புரட்சி மாநாடு நடத்தப்படவுள்ளதாக SMC இணை இயக்குநரும், தென் மண்டல ஒருங்கிணைப்பாளருமான சுப்ரமணியம் செய்தியாளர் அழைப்பு விடுத்துள்ளார்.

SMS தோற்றுநரான ‘கல்வித் தந்தை’ Dr தம்பிராஜா, கடந்தாண்டு ஜூன் 22-ஆம் தேதி தனது 83 வயதில் காலமானார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!