Latestமலேசியா

RM2.06 மில்லியன் மதிப்புள்ள 6,916 தொடர்பு சாதனங்களை பறிமுதல் – மலேசியா தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம்

 

சைபர் ஜெயா, ஜூன் 29 – நிர்ணயிக்கப்பட்ட தொழில்நுட்பத் தரநிலைகளுக்கு இணங்காத மற்றும் சான்றளிக்கப்படாத தொடர்பு சாதனங்களை விற்பனை செய்தல் அல்லது விற்பனை நோக்கத்திற்காக அவற்றை வைத்திருந்த நிறுவனத்திற்கு எதிராக ஜூன் 24 ஆம் தேதி மலேசியா தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC நடவடிக்கை மேற்கொண்டது. இந்த நடவடிக்கையின் போது, ​​சுமார் 2.06 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள, சான்றளிக்கப்படாததாகக் கருதப்படும் 6,916 தகவல் தொடர்பு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றில் கம்பியில்லா மூடிய-சுற்றுத் தொலைக்காட்சி கேமராக்களும் அடங்கும். மேலும், விசாரணைக்கு உதவும் வகையில் கணினிகள், அச்சுப்பொறிகள், கைதொலைபேசிகள் மற்றும் வைஃபை (WiFi) ரௌட்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

கிள்ளானில் உள்ள ஒரு கிடங்கு, ஜோகூர் பாருவிருள்ள வணிக அலுவலகம், மற்றும் நேரலை ஒளிபரப்பு ஸ்டுடியோவாகப் பயன்படுத்தப்படும் ஒரு வளாகம் ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் 44 அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக MCMC வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. டிக்டாக் ஷாப் (TikTok Shop) மற்றும் ஷோப்பி (Shopee) உள்ளிட்ட மின்னணு வர்த்தகத் தளங்கள் வாயிலாக, சம்பந்தப்பட்ட தொடர்பு சாதனங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததும் விற்கப்பட்டதும் தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்தது. நிறுவன மேலாளர், கிடங்கு உதவியாளர் மற்றும் நேரலை ஒளிபரப்பு தொகுப்பாளர் உட்பட (8) நபர்களிடம் விசாரணைக்கு உதவும் வகையில் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. 2,000 ஆம் ஆண்டின் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் தொழில்நுட்பத் தரநிலைகள், விதிமுறைகளின் கீழ் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சட்டத்தின்படி, குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக மூன்று லட்சம் ரிங்கிட் அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இவையிரண்டும் விதிக்கப்படலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!