
கோலாலம்பூர், ஜூன்-30-கடந்த வாரம் சொத்துடைமை முகவர் ஒருவரால் இளம் பெண் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில், கடுமையான பொறாமை உணர்வே முதன்மைக் காரணம் என்பதைப் போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கோலாலம்பூர், செராஸ், மாலூரி MRT இரயில் நிலையப் பேருந்து நிறுத்தத்தில், தனது முன்னாள் காதலியைத் தாக்கியதன் பேரில் 20 வயது அவ்விளைஞர் முன்னதாக கைதானார்.
இந்நிலையில் விரிவான விசாரணையில், சந்தேக நபர் தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல், பாதிக்கப்பட்ட பெண்ணைக் கொடூரமாகத் தாக்கியதோடு அவருக்குக் கொலை மிரட்டலும் விடுத்துள்ளதாகப் போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சந்தேக நபர் ஒரு நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து, குற்றவியல் சட்டத்தின் கீழ், காயம் ஏற்படுத்துதல் மற்றும் குற்றவியல் மிரட்டல் ஆகிய குற்றச்சாட்டுகளுக்காகப் போலீஸார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



