
கோலாலம்பூர், ஜூலை-3 – கோலாலம்பூர் மொத்தச் சந்தை பகுதியில், வெளிநாட்டினர் ஓட்டும் வாகனங்களை குறிவைத்து நடத்தப்பட்ட ஒப் பெவா (Op PEWA) சோதனையில் 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 136 அபராத நோட்டீஸ்களும் வழங்கப்பட்டன.
நேற்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்தச் சோதனையை, சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ), கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL) மற்றும் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கப் பிரிவு (JSPT) இணைந்து மேற்கொண்டன.
மொத்தம் 36 வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டதில், 20 வாகனங்கள் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டன.
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், காலாவதியான சாலைவரி (LKM), காப்புறுதி இல்லாமை மற்றும் அனுமதியின்றி வாகனங்களை மாற்றியமைத்தல் ஆகியவை முக்கிய குற்றங்களாக கண்டறியப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் 7 சரக்குத் தூக்கி இயந்திரமான forklift, 3 கார்கள், 8 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 2 மின்சார மோட்டார் சைக்கிள்கள் உள்ளடங்கும்.
மேலும் சாலை விதிகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், சாலைப் பாதுகாப்பை உறுதிப்படுத்த இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் JPJ தெரிவித்துள்ளது.



