
சிலாங்கூர், கிள்ளானில் உள்ள மொத்த விற்பனை மையமொன்றில் குடிநுழைவுத்துறை நடத்திய அதிரடிச் சோதனையில் 86 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் சீனா, கம்போடியா, பிலிப்பின்ஸ், மியன்மார், இந்தோனேசியா, இந்தியா, வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்.
கள்ளக்குடியேறிகளைக் குறிவைத்து அந்த ‘Op Mega’ சோதனை நடத்தப்பட்டதாக குடிநுழைவுத்துறை அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில், 50 வணிகத் தளங்களையும் 327 தனிபர்களையும் சோதனையிட்டத்தில் அந்த 86 பேரும் பிடிபட்டனர்.
சோதனையின் போது அவர்கள் தப்பியோட முயன்றதாகவும் அமலாக்க குழுவினர் துரித நடவடிக்கைகள், Dron பயன்பாடு ஆகியவற்றின் மூலம் அம்முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் குடிநுழைவுத்துறை கூறியது.
குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் குற்றம் புரியும் சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன.
ஒருங்கிணைந்த, விரிவான மற்றும் திறமையான முறையில் அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை உறுதிச் செய்ய பிற துறைகளின் உதவியும் நாடப்பட்டுள்ளதாக குடிநுழைவுத்துறை விளக்கியது.
அச்சோதனையில் மலேசிய அரச சுங்கத் துறை, தேசியப் பதிவுத் துறை, உள்நாட்டு வாணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சு ஆகியவையும் இணைந்து ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.



