
பெட்டாலிங் ஜெயா, ஜூலை-3-வங்கிகளுக்குச் சொந்தமில்லாத ஏடிஎம் (ATM) இயந்திரங்களில் பணம் எடுக்கும்போது, வழக்கமான 1 ரிங்கிட் சேவைக் கட்டணம் தொடர்ந்து வசூலிக்கப்படலாம் என்று மூன்று வங்கி அமைப்புகள் தெரிவித்துள்ளன.
மலேசிய வங்கிகள் சங்கம் (ABM), மலேசிய இஸ்லாமிய வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் சங்கம் (AIBIM) மற்றும் மலேசிய மேம்பாட்டு நிதி நிறுவனங்கள் சங்கம் (ADFIM) ஆகியவை வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், 1 ரிங்கிட் கட்டண விலக்கு வங்கிகளால் இயக்கப்படும் ஏடிஎம் இயந்திரங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.
வங்கிகளின் ஏடிஎம் இயந்திரங்களில் அந்த வங்கியின் பெயரும் சின்னமும் மட்டும் இருக்கும். ஆனால், வங்கி அல்லாத ஏடிஎம்களில் பல வங்கிகளின் சின்னங்கள் இடம்பெற்றிருக்கும் என்றும் அவை விளக்கின.
இந்த 1 ரிங்கிட் கட்டண விலக்கின் மூலம், மலேசியா முழுவதுமுள்ள 14,000-க்கும் மேற்பட்ட வங்கி ஏடிஎம்களில், ‘டெபிட்’ அட்டை வைத்திருப்பவர்கள் வரம்பின்றி இலவசமாக பணம் எடுக்க முடியும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



