
தைப்பிங், ஜூலை 8 – ஜப்பானுக்கு அனுப்பப்பட்ட தாரா, அமோய், கெலாட் (Dara, Amoi, Kelat) ஆகிய மூன்று யானைகள் தொடர்பான விவகாரத்தில், தைப்பிங் நகராண்மைக் கழகத்தின் (MPT) புரிந்துணர்வு ஒப்பந்தம் அதாவது MoU ஆவணங்களை மட்டுமே மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM இதுவரை ஆய்வு செய்து வருகிறது.
தைப்பிங் நகராண்மைக் கழகத்தின் தலைவர் முகமட் அக்மால் டஹாலான் கூறுகையில், விசாரணையின் முக்கிய கவனம் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சின் மீதே உள்ளது என்றார்.
HIDUP அமைப்பின் புகாரைத் தொடர்ந்து, இயற்கை வளங்கள் அமைச்சு, PERHILITAN, தைப்பிங் நகராண்மைக் கழகம் மற்றும் சம்பந்தப்பட்ட முகவர் மீது SPRM விசாரணையைத் தொடங்கியது.
இந்த யானைகள் இடமாற்றத்தில் சுமார் 53 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பணப் பரிவர்த்தனையில் முறைகேடு நடந்ததாக சந்தேகம் எழுந்துள்ளது.
சர்ச்சை இருந்தபோதிலும், தைப்பிங் மிருகக்காட்சி சாலை சுற்றுலா, கல்வி மற்றும் வனவிலங்கு பாதுகாப்பை மேம்படுத்த வெளிநாட்டு அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவதைத் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.



